அண்ணா பல்கலை.,யில் பி.இ, பி.டெக் படிக்க 5% தொழில் நிறுவன கோட்டா; விண்ணப்பப் பதிவு தொடக்கம்.
தொழில் நிறுவனங்களில் கூட்டமைப்பு ஒதுக்கீட்டின் கீழ் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.பிளான் படிப்புகளுக்கு ஏப்ரல் 4 முதல் ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம்; அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் தொழில் நிறுவனங்கள் கோட்டாவுக்கான (Industrial Quota) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கைப் பெறுவதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். பொறியியல் சேர்க்கையானது 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், கட் ஆஃப் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் நடைபெறும்.
அதேநேரம், அண்ணா பல்கலைக்கழகத்தின் (Anna University) உறுப்பு கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி (CEG), எம்.ஐ.டி கேம்பஸ் (MIT), ஏ.சி.டெக் கேம்பஸ் (ACT) ஆகியவற்றில் தொழில் நிறுவன கோட்டா அடிப்படையிலும் சேர்க்கை நடைபெறும். ஒரு தொழில் நிறுவனம் ஒரு மாணவரை, நாங்கள் படிக்க வைத்து, நாங்களே வேலைக்கு எடுத்துக் கொள்கிறோம் என ஸ்பான்சர்ஷிப் செய்யும் நிலையில், சேர்க்கை வழங்கப்படும். இதற்கென்று தனியாக ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 5% இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில், தொழில்நிறுவன கோட்டாவின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. பி.இ., பி.டெக்., பி.பிளான் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் ஏப்ரல் 4 முதல் ஜூன் 9 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cfa.annauniv.edu/cfa/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 2500 + 18% GST.
ஒரு பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனம் விண்ணப்பிக்க தகுதியுடையது. இந்த நிறுவனம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியில் அமைந்திருக்க வேண்டும். இது ஒரு தலைசிறந்த நிறுவனமாக இருக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன் உற்பத்தி, தயாரிப்பு அல்லது சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, ஆர்க்கிடெக்சர் போன்ற துறைகளில் 3 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
அடுத்ததாக துணைவேந்தரால் நியமிக்கப்படும் நிபுணர்கள் குழு நிறுவனத்தை ஆய்வுச் செய்து அறிக்கை அளிக்க, திரும்ப பெற முடியாத கட்டணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்தால் ரூ. 30000 + 18% GST, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தால் ரூ. 40000 + 18% GST, தமிழ்நாட்டிற்கு வெளியில் இருந்தால் ரூ. 50000 + 18% GST செலுத்த வேண்டும். தகுதி பெறும் நிறுவனம் சில விதிமுறைகளுடன் அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ஒரு மாணவருக்கு ஸ்பான்சர்ஷிப் செய்யும் நிறுவனம் ரூ. 15 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
நிறுவனம் சம்பந்தப்பட்ட பாடபிரிவுகளிலே இடங்கள் ஒதுக்கப்படும். அந்த நிறுவனம் குறைந்தது 10 மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப், புராஜெக்ட் வாய்ப்பு வழங்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள் :-
- மாணவர் பற்றிய விவரங்கள் அடங்கிய நிறுவனத்தின் லெட்டர்ஹெட்
- மாணவரின் மதிப்பெண் சான்றிதழ்கள்
- நிறுவனம் பற்றிய தகவல்கள்
- நிறுவனத்தின் கடந்த 3 ஆண்டு வரவு செலவுகள்
- நிறுவனத்தின் வருமான வரி தாக்கல் விவரங்கள்
- நிறுவனம் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்கள்
மாணவரின் தகுதிகளைப் பொறுத்தவரை, பொதுப் பிரிவினர் 45% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும், மற்ற அனைவருக்கும் 40% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அதிகமானோர் விண்ணப்பித்திருந்தால், மெரிட் லிஸ்ட் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.