Tamil Nadu Government அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் வாங்கி வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு சூப்பரான குட்நியூஸை கொடுத்திருக்கிறது.
Tamil Nadu Government Land Rules :- மலைப்பகுதிகளில் அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் வாங்கி வைத்திருப்பவர்கள் மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் வகையில் கொடுக்கப்பட்ட காலவகாசத்தை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது. கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் உட்சத்தில் இருந்தபோது பலர் மலைப்பகுதிகளிலும் வீட்டுமனைகள் வாங்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், அவற்றில் பல வீட்டு மனைகள் முறையான அரசு அனுமதி பெறாமல் போடப்பட்டுள்ளது. இதனால் அரசு அங்கீகாரம் அந்த மனைகளுக்கு கொடுக்கப்படவில்லை. இந்த சூழலில் மலைப்பகுதிகளில் அத்தகைய வீட்டு மனை வாங்கியவர்கள் தமிழ்நாடு அரசுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் கோரிக்கை வைத்தனர்.
அதேபோல், அண்மையில் கோவையில் நடந்த அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை மண்டல பொறுப்பாளர்கள் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்திலும் இந்த கோரிக்கையை அரசுக்கு வைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பேசிய பெய்ரா (FAIRA) அமைப்பு நிர்வாகிகள் அனைவரும், மலைப்பகுதிகளின் அருகில் உள்ள அங்கீகாரமற்ற வீட்டு மனை பிரிவுகளில் விற்கப்படாத மனைகளை மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் வகையில் அரசாணை எண் 65/2020 -ஐ மேலும் 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்திட வேண்டும். தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் பொது கட்டிட விதிகள் 2019-ல் உள்ள பல விதிகள் மலைப்பகுதிகளுக்கு பொருந்தவில்லை. ஆகவே மலைப் பகுதிகளுக்கென தனியாக புதிய கட்டிட விதிகளை உருவாக்கிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த சூழலில் தமிழ்நாடு அரசு மலைப்பகுதிகளில் அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் வாங்கி வைத்திருப்பவர்கள் மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் வகையில் கொடுக்கப்பட்ட காலவகாசத்தை நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மலையிடப்பகுதிகளில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழு எண்ணிக்கையிலான மனைகள் விற்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு வசதியாக, அரசு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்.66, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நாள்.30.03.2020-இல் விதி திருத்தத்தை வெளியிட்டுள்ளது.
இதன் படி பொதுமக்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க மேலும் வாய்ப்பை வழங்கி விண்ணப்பங்களுக்கான கால வரம்பை 30.11.2025 வரை நீட்டித்து அரசாணை எண்.32, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள்.25.02.2025-ல் உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.tnlayouthillareareg.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன்மூலம், மலையிடப்பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த பொதுமக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.