கல்லூரி சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணத்தை திருப்பி தராவிட்டால் மானியம் ரத்து போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று யுஜிசி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பு: "கல்லூரிகளில் சேர்ந்து குறிப்பிட்ட அவகாசத்துக்குள் சேர்க்கையை ரத்து செய்துவிட்ட மாணவர்களுக்கு உரிய விதிமுறைகளை பின்பற்றி அவர்கள் செலுத்திய கட்டணங்களை திருப்பி தரவேண்டும். அதன்படி நடப்பு கல்வியாண்டில் கல்லூரி சேர்க்கையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரத்து செய்பவர்களிடம் வசூலிக்கப்பட்ட முழு கட்டணத்தை கல்லூரிகள் திருப்பி தர வேண்டும்.
அதேபோல், அக்டோபர் 31-ம் தேதிக்குள் ரத்து செய்தால் சேர்க்கை பணிகளுக்காக ரூ.1,000 மட்டும் மாணவர்களிடம் வசூலிக்கலாம். அதற்கு பின் சேர்க்கையை ரத்து செய்பவர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கான கட்டணத்தை பிடித்தம் செய்துகொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் முழு கல்வியாண்டு அல்லது நடப்பு பருவத்துக்கான கட்டணங்களை பிடித்தம் செய்யக்கூடாது. இந்த கொள்கை யுஜிசி-யால் அங்கீகாரம் பெற்ற ஒவ்வொரு உயர் கல்வி நிறுவனத்துக்கும் பொருந்தும் என்று பல்வேறு சுற்றறிக்கைகள் வாயிலாக கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதே நேரம் இந்த வழிமுறைகளை கணிசமான கல்லூரிகள் முறையாக பின்பற்றுவதில்லை என தொடர்ச்சியாக புகார்கள் வருகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் யுஜிசி விதிமுறைகளை கல்லூரிகள் அவசியம் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் உரிய விதிகளின்படி உயர்கல்வி நிறுவனங்களின் திறந்தநிலை, இணையவழி படிப்புக்கான உரிமம், மானியத்துக்கான 12பி அங்கீகாரம் ரத்து போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Tags
Education