பெரும்பாலான சமூகங்களில், திருமணத்தின் போது ஒரு பெண் தங்கத்தால் செய்யப்பட்ட “திருமாங்கல்யம்” அணிவது ஒரு வழக்கமான கலாச்சாரத் தேவையாகும், மேலும் பெற்றோர்கள் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சார பின்னணியின்படி திருமண விழாவைக் கொண்டாடுகிறார்கள். இருப்பினும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். அத்தகைய பெற்றோருக்கு உதவவும், அவர்களின் மகள்களை சரியான வயது வரை படிக்க ஊக்குவிக்கவும், அரசால் திருமண உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழைப் பெற்றோரின் மகள்கள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள் , கலப்புத்திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் மற்றும் கைம்பெண்களின் மகள் ஆகியோருக்கு உதவும் வகையில் திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவி பெறுவதற்கான தகுதி அளவுகோல்கள்

திட்டம்-I

கல்வித் தகுதி: மணமகள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பழங்குடியினராக இருந்தால் மணமகள் V வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.

பண உதவி: ரூ. 25,000 மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும், 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.

திட்டம்-II

கல்வித் தகுதி: கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள், தொலைதூரக் கல்வி / அரசு அங்கீகாரம் பெற்ற திறந்த நிலைப் பல்கலைக்கழகம் படித்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள். பட்டயம் படித்தவர்கள் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பண உதவி: மின்னணு பரிவர்த்தனை மூலம் 50,000 செலுத்தப்படும், , 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.

1. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம்

2022 -2023 ஆம் ஆண்டு முதல், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில், உயர் கல்வியில் சேர்ந்துள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் ரூ.1000/- மாதந்தோறும் அவர்கள் பட்டப்படிப்பு முடியும் வரை பெற தகுதியுடைவர்கள்.

2. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம்

இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் மின்னணு மூலம் ரூ.15,000 நிதியுதவியும், தேசிய சேமிப்புச் சான்றிதழாக ரூ.10,000ம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற வருமான உச்சவரம்பு மற்றும் கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பட்டம்/பட்டயம் படித்தவர்களுக்கு ரூ.50,000, அதில் ரூ.30,000 மின்னணு மூலமாகவும், `20,000 தேசிய சேமிப்புச் சான்றிதழுடன், 8 கிராம் 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

3. .வி.ஆர்மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.25,000/- நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயமும் பயனாளிக்கு வழங்கப்படுகிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டப்படிப்பு எனில் ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

4. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம்

இந்தத் திருமண உதவித் திட்டத்தின் கீழ், பயன் பெறுவதற்கு வருமான உச்சவரம்பு மற்றும் குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயிக்கப்படவில்லை. பயனாளிகளுக்கு ரூ.25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு எனில் ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

5. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் மணமகள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ரூ.25,000 நிதியுதவில், ரூ.15,000 மின்னணு மூலமாகவும், ரூ10,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது. பட்டம்/பட்டயப்படிப்பு பெற்றவர்களுக்கு ரூ.50,000, அதில் ரூ.30,000 மின்னணு மூலமாகவும், ரூ.20,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது. வருமான உச்சவரம்பு மற்றும் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

கலப்பு திருமணத்தின் வகைகள்

வகை – I : கலப்பு திருமண தம்பதிகளின் துணைவர்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருக்க வேண்டும் அதே சமயம் மற்ற ஒருவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

வகை – II: வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் முன்னேறிய அல்லது பொதுப்பிரிவை சேர்ந்தவர்களாகவும், மற்ற ஒருவர் பிற்பட்ட/மிகவும் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.